24/08/2014

ஆடித்தபசு

ஒருமுறை பார்வதி தேவிக்கு, தன் கணவர் சிவபெருமான் உயர்ந்தவரா? அல்லது தன் அண்ணன் ஸ்ரீமகாவிஷ்ணு உயர்ந்தவரா? என்ற கேள்வி எழுந்தது.

அதை மற்றவர்களிடமிருந்து அறிந்து கொள்ளவும் விரும்பினார். “சிவனுக்கு புலிதோலும், திருவோடும்தான் சொந்தம். மயானமே அவன் இருப்பிடம். அன்னபூரணியிடம் பிச்சை எடுத்தவர்” என்று சிவனை பற்றி விமர்சித்தார்கள் விஷ்ணு பக்தர்கள்.

“உன் அண்ணனான விஷ்ணுவை பற்றி குறை சொல்கிறோம் என்று தவறாக நினைக்க வேண்டாம். செல்வந்தனாக இருந்தாலும் குபேரனிடம் கடன் வாங்கி இன்றுவரை கடன்காரன் என்ற பெயரோடு இருப்பவர். முனிவரின் காலால் உதை வாங்கியவர். இப்படிப்பட்ட பெருமாள் நம் ஈசனுக்கு இணையாவாரா?” என்றார்கள் சிவ பக்தர்கள்.

இரு பக்தர்களின் பேச்சை கேட்டு மேலும் குழப்பம் அடைந்தாள் பார்வதி. இவர்கள் இருவரில் யார் உயர்தோர் என்பதை அறிந்தே தீர வேண்டும், இதை அறியாமல் விடுவதாக இல்லை என்று முடிவு செய்து புன்னைவனத்தில் பார்வதி தேவி தபஸ் செய்தாள்.

பல வருடங்கள் தவம் இருந்ததால் பார்வதியின்  தவத்தை ஏற்று ஹரியும் ஹரனும் ஆடி மாதம் பவுர்ணமி அன்று சங்கரநாராயணராக காட்சி தந்தார்கள். “பார்வதி… உனக்கு ஏன் இந்த வீண் குழப்பம்.? நாங்கள் இருவரும் சமமானவர்கள்தான். உடல் இல்லையெனில் ஆத்மாவுக்கு மதிப்பில்லை. ஆத்மா இல்லையெனில் உடலுக்கு மதிப்பில்லை. இரண்டும் சேர்ந்து இருக்கும்வரைதான் நல்லது. அதுபோல உடலும் ஆத்மாவும் போன்றதே நாங்கள். எங்கள் இருவரின் துணை உள்ளோரே வளம் பெறுவர். அதனால் உன் வீணான சந்தேகத்தை ஒழி.“ என்றார் ஈசன்.

“ஹரனும் உன் அண்ணனான இந்த ஹரியும் சம உயர்வு கொண்டவர்களே என்பதை உணர்ந்தாயா என் தங்கையே.” என்று புன்னகைத்தார் ஸ்ரீமகா விஷ்ணு. அம்மன், ஹரியும் சிவனும் ஒன்று என்பதை தானும் பக்தர்களும் அறியவே தபஸ் அதாவது தவம் செய்து சங்கரநாராயணராக இருவரையும் காட்சிகொடுக்கும்படி செய்தார்.

தபஸ் செய்யும் அம்மனை வணங்கினால் நினைத்தது நடக்கும். வேண்டியதை வேண்டியபடி தருவாள். அதுவும் ஆடிமாதம் பவுர்ணமி அன்று அதாவது, “ஆடி தபசு திருநாள்” அன்று தபஸ் செய்யும் அம்மனை வணங்கினால் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். சுபிக்ஷங்கள் அனைத்தும் தேடி வரும்

No comments:

Post a Comment